ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கொரியப் போர் மீண்டும் தொடங்குமா?



கொரிய தீபகற்பத்தை 60 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. எப்போது போர் வெடிக்குமோ? எத்தனை இலட்சம் பேர் அழிவார்களோ என்ற பேரச்சம் உலகைச் சூழ்ந்துள்ளது.




ஏனெனில் நடக்கப்போவது சாதாரண போராக அல்ல, அணு ஆயுதப் போர் என்பதனாலேயே இந்தப் பேரச்சம். எனவே, கொரியப் போர் தொடங்கினால் அது மூன்றாம் உலகப்போராக மாற்றமடையுமா? என்பதுதான் இன்றுள்ள ஊடகங்கள் பலவற்றின் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் அணு ஆயுதப் போராக மாற்றமடையும் என எச்சரிக்கப்படும் கொரியப் போர் கொரியக் குடாவிற்குள் மட்டும் முடிந்தவிடப்போவதில்லை. அது ஏனைய நாடுகளையும் பாதித்து அந்நாடுகளையும் போரில் குதிக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒரு போர் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான் இராணுவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.



‘வட கொரியாவின் போர் மிரட்டல்கள் வெறும் வாய்ச் சவடால்களே என்றும் அவர்களின் செயற்பாடுகளே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்’ என்றும் அமெரிக்கா கருதுகின்றது. ஆனால், வெளியார் யாரும் நுழையமுடியாதவாறு இரும்புக் கோட்டையாகத் திகழும் வடகொரியாவின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை கண்டறிவது அவ்வளவு இலகுவானதல்ல. வட கொரியா களத்தில் இறங்கினாலேயே அதனை ஓரளவிற்கு கண்டறியமுடியும். அதனாலேயே வட கொரியா போர்க் களத்தில் இறங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் உண்டு.

வட கொரியா ஏன் இந்தளவு போர் வெறி கொண்டு நிற்கின்றது. தனது சகோதர்கள் வாழும் தென் கொரியாவை அழிக்கவேண்டும் என்ற அதன் சிந்தனைக்கு காரணமென்ன? இதனை அறிந்துகொள்வதற்கு கொரியாவின் வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்துகொள்வது நல்லது.

5000 ஆண்டு வரலாறு கொண்டதாகக் கூறப்படும் கொரிய வரலாற்றில், 1910ம் ஆண்டுக்குப் பின்னர்தான் உலகின் கவனத்தை கொரியா ஈர்த்தது. ஒரே தேசமாக இருந்த கொரியாவை ஜப்பான் கைப்பற்றியதில் இருந்துதான் அந்நாடு போர்களையும் சந்திக்கத் தொடங்கியது. அயல் நாடுகளை ஆக்கிரமிக்கவும் தன்னைப் பலவானாகக் காட்டுவதற்கும் ஜப்பான் எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் வந்த வினை, இரண்டாம் உலகப் போரில் பாரிய வீழ்ச்சியையும், பேரழிவையும் சந்தித்து ஜப்பான். ஜப்பான் மீண்டும் நிமிர்ந்தெழ முடியாதளவிற்கு அமெரிக்கா கொடுத்தது இரு அணுகுண்டுத் தாக்குதல்.
1945ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது கொரியா ஜப்பானின் ஆளுகைக்குள் இருந்து விடுபட்டது. ஆனால், பேயிடம் இருந்து தப்பி பிசாசிடம் மாட்டிய கதையாக, ஜப்பானிடம் இருந்து விடுபட்ட கொரியாவை போரில் வெற்றி ஈட்டிய ‘நேச நாடுக’ளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.

ஒரே நாடு இரண்டு துண்டங்களாகின. வட பகுதியை சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கொம்யூனிஸ்ட் கட்சியினரும், தென் பகுதியை அமெரிக்க ஆதரவு பெற்ற முதலாளித்துவ ஆட்சியாளர்களும் கைப்பற்றி ஆட்சியமைத்தனர். ஆனால், வடகொரியா சும்மா இருக்கவில்லை. தென் பகுதியை மீட்டெடுத்து ஒரே தேசமாக்க பலமுறை முயன்றது. ஆனால் அது கைகூடவில்லை.

1950ல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வட கொரியா. தென்கொரியத் துருப்புகளால் ஈடுகொடுக்க முடியாமல் போன நிலையில், ஜப்பானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் விரைந்து வந்து தோள் கொடுத்தன. ஆனாலும் வட கொரியப் படையினரின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளமுடியவில்லை. வட கொரியப்படை தென் கொரியத் தலைநகர் வரை முன்னேறியிருந்தது.

நிலைமை கையை மீறிப்போய் தென் கொரியா முழுமையாக வடகொரியாவிடம் வீழ்ந்துவிட்டால் பின்னர் மீட்டெடுப்பது முடியாத காரியம் என்பதைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா. சபையையே புறக்கணித்தது. ஆனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பாதுகாப்பு சபையில் அப்போது மக்கள் குடியரசு சீனா அங்கம் பெற்றிருக்கவில்லை.

இதனால், அமெரிக்காவின் தீர்மானம் கடும் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 இலட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் சர்வதேசப் படை உருவானது. பெயர்தான் சர்வதேசப் படை. ஆனால் அப்படையில் இருந்தவர்களில் 2.60 இலட்சம் பேர் அமெரிக்கர்கள். இந்தப் படை 1950 செப்டம்பரில் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. சுமார் ஒரு மாதங்களுக்குள்ளாகவே பறிபோன தென்கொரியப் பகுதிகள் அனைத்தும் மீட்கப்பட்டன.

ஐ.நா.வின் படைகள் அத்துடன் நிற்கவில்லை. அமெரிக்காவின் ஆசையும் அத்துடன் அடங்கவில்லை. ஓடுகின்றவர்களைக் கண்டால் துரத்துகின்றவர்களுக்கு சந்தோசம் தானே. வடகொரியப் படையின் வேகமான பின்வாங்கலைப் பார்த்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி எஸ். டுருமென், ஐ.நா. படையினரை மேலும் முன்னேறப் பணித்தார். ஐ.நா. சர்வதேசப் படை வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. வடகொரியாவுடன் அதன் நடவடிக்கை நின்றிருந்தால் பறவாயில்லை.

ஆனால் சீன - வடகொரிய எல்லையாக இருக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கியும் படை முன்னேறியது. இந்த யாலு ஆறுதான் வட கொரியா - சீனாவின் 60 வீதத்திற்கும் அதிகமான எல்லையாக இருக்கின்றது. இந்த ஆற்றை நோக்கி ஐ.நா. படைகள் முன்னேறியது சீனாவிற்கு சீற்றத்தைக் கொடுத்தது. (வடகொரியாவை தனது நட்பு நடாக சீனா இன்று வரை வைத்திருக்க முனைந்தாலும், தன்னிச்சையான அதன் போர்கள்தான் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. வட கொரியாவின் போர் தனது வாசல் வரை வருவதை சீனா விரும்புவதில்லை. இதனாலேயே வட கொரியாவை போரை முன்னெடுக்காமல் தடுக்க முயல்வதற்கும், அந்நாட்டை எதிர்க்க முயல்வதற்கும் காரணம். இதுபற்றிப் பின்னர் பார்ப்போம்)

ஐ.நா. படைகள் முன்னேறி வருவதை எதிர்கொள்ளத் தயராகின சீனத் தொண்டர் படை. இந்தப் போரில் சீனா களம் இறங்கும் என்று ஐ.நா.வோ அமெரிக்காவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விளைவு, கொரியப் போருக்குள் சீனாவும் நுழைந்தது. யாலு ஆற்றுடனான மலைப் பிரதேசங்களில் நின்று தாக்கிய சீனப் படைகளிடம், 1950ம் ஆண்டு டிசெம்பர் மாதம் கடும் குளிருக்கு மத்தியில் ஐ.நா. படையினரால் நின்று பிடிக்கமுடியவில்லை.

இழப்புக்கள் அதிகரிக்க அதகரிக்க ஐ.நா. படை பின்வாங்கத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் இழுபட்ட இந்தப் போரின் முடிவில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகக் கணிப்பிடப்பட்டது. 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. தென் கொரியாவில் நிரந்தரத் தளங்களை அமைத்துக்கொண்டது அமெரிக்கா.

இப்போது தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப் படைகள் மறுபுறமும் 240 கிலோ மீற்றர் நீளமுள்ள எல்லையை பாதுகாத்து வருகின்றன. ஆனால், அன்று தொட்டு இன்றுவரை போர்ப் பதட்டமே அந்த எல்லையில் இருந்து வருகின்றது. இந்நிலையில்தான், கடந்த மாத இறுதியில் தென் கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்தது. அத்துடன்,  தென்கொரிய அரசு மற்றும் இராணுவத்துடனான தொடர்பு இணைப்புக்களையும் துண்டித்துவிட்டது.

இதற்கும் மேலாகத் தங்கள் நாட்டைத் தற்காத்துக்கொள்ள அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரித்ததுதான் இன்று கொரிய தீபகற்பத்தை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதற்கு முழுமுதற் காரணம். இந்தப் போர் வெடிக்குமா?


நன்றி: ஈழமுரசு