வியாழன், 2 மே, 2013

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்.



முதல்ல எல்லோருக்கும் என்னோட வணக்கத்த சொல்லி என்னோட பதிவ பத்தி கொஞ்சம் சொல்லிட்டு பதிவுக்கு போகலாம்னு நினைக்கிறேன்..

அதாவது எனக்கு கொஞ்ச நாளா புத்தகம் படிக்கிற ஆர்வம் வந்ததின் விளைவு நானும் ஒரு பதிவரா (?!?!?) காலத்தின் 
கட்டளையை ஏத்து உங்க முன்னால 
நிக்கிறேன்னு பெருமையோட சொல்லிக்கிறேன்.

ஆமா உன் ப்ளாக்கில நிறைய பதிவு இருக்கே இந்த பதிவுக்கு மட்டும் ஏண்டா இவ்வளவு பில்ட் அப் குடுக்கிறேனு தானே உங்க மனசுக்குள்ள கேக்குறீங்க ?? (மைண்டு வாயிச காட்ச் பன்னிட்டேன் ஹிஹி) அதாவது நான் கொஞ்ச பதிவுகள ஏர்க்கனவே போட்டிருந்தாலும் அதுல பாதிக்கு மேல ஈயடிச்சான் காப்பி தாங்க... (ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன சமூக சேவை) 
ஆனா அத சொல்றதுக்கு நான் ஒன்னும் வெக்கப்படல ஆயிரம் பேர கொன்னா தாண் அரை டாக்டர் ஆகலாம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க சோ... நான் ஆயிரம் பதிவ கூட சுடலைங்க ஏதோ அஞ்சு பத்து தாண். ( செஞ்ச மொள்ளமாரி தனத்த மறைக்க எவ்வளவு பக்க டயலாக்கு..ஸ்ஸப்ப்ப்பா....) 

மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா என்னைய விட உங்க எல்லாருக்கும் அவர பத்தி நிறையவே தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் நான் படிச்ச எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் எங்குற புத்தகத்தில நம்ம தலைவர் எம்.ஜி.ஆர் பத்தி நான் படிச்சு ஆச்சர்யப்பட்ட பல விஷயங்கள உங்களுக்கு பதிவா தரலாம்னு ஒரு யோசனை வந்ததால இந்த பதிவ எழுதுறேன்.
        

அவர பத்தி தெரியாதவங்க ஒரு சிலர் இருந்தா அவங்க இத படிச்சு தெரிஞ்சுக்கிட்டா கூட நான் எழுதுறதுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்குனு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன் ( இதுக்கு மேலயும் என்னோட இந்த பதிவ தொடர்ந்து படிக்கலைன்னா நான் அழுதுடுவேன்.. அப்பிடின்னு உங்க எல்லோருக்கும் எச்சரிக்கை விடுகிறேன் ஹிஹி )

எம்.ஜி.ஆர பத்தி சொல்லனும்னா ஒரு பதிவு போதாது அதனால நான் ரசிச்ச மற்றும் வியந்த விஷயங்கள மட்டும் பதிவா எழுதுறேன்


சரி இப்போ பதிவுக்கு வருவோம்....



19777‍ ‍ல் எம்.ஜி. ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். கர்னாடக மானிலத்தில் அப்போது முதல்மைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டுராவ் பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வர வேணும்னு எப்பவும் அழைச்சுட்டே இருப்பார் குண்டுராவின் பிறந்த நாளுக்கு அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர் அவருடன் அவர் மனைவி ஜானகி அம்மா மற்றும் ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர்

மறு நாள் கர்னாடக முதலைமச்சர் குட்ண்டுராவின் பிறந்த நாள் விழாவை முடித்துக்கொண்டு காலை பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினார்கள்

11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெய்யில், இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெய்யிலில் தவித்துக்கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் நடந்து , பிறகு வெய்யிலுக்காக ஓரமாக நின்று பிறகு மீண்டும் நடை.

'ராமசாமி காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். ராமு போய் அவங்களை விசாரிச்சுட்டு வா என்றார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக்கிழவி. தூரத்தில் இருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்.. என்றார்'

உடனே தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடமும் அவர்கள் அணிந்திருந்த செருப்புக்களை கொடுக்கச்சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பெட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து செருப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை கொடுக்கச்சொன்னார் எம்.ஜி.ஆர்.

எதிர்பாராமல் இவ்வளவு பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்னுமே புரியவில்லை. 

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர் பின்பு அங்கிருந்து புறப்பட்டார். 
                                         
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் இல்லாம கேக்காதவங்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்றது தான் எம்.ஜி.ஆரின் குணம்.

                                                       ***

கே.ஜே ஆஸ்பத்திரியில் ஸ்டண்ட் நடிகர் ராமகிருஷ்ணன் என்பவர் சண்டைக்காட்சியில் தவறுதலாக அடிபட்டு எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவரை பார்க்க தினமும் வருவார் எம்.ஜி.ஆர்.

நடிகையர் திலகம் சாவித்திரியும் அதே ஆஸ்பத்திரியில் மஞ்சல் காமாலை  நோயால் அவர் ப்âஅதிக்கப்பட்டதால் டைரக்டர் ஏ.சுப்புராவ் அவரை இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருந்தார். பணமில்லாததால் தான் கஷ்டப்படுவதாக ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார் சாவித்திரி.

அதற்கு பறு நாள் ராமகிருஷ்ணனை எம்.ஜி.ஆர் பார்க்க வந்த போது இங்கு சாவித்திரி சிகிச்சை பெறுவதை அவரிடம் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.

சாவித்திரியை எம்.ஜி.ஆர் அவரது ஆஸ்பத்திரி அறையில் சந்தித்தார் . ' எனக்கு ஆதரவாக இப்போ யாரும் இல்லை கஷ்டமாக இருக்குண்ணே...' என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார் சாவித்திரி.

நல்ல செல்வாக்கில் வாழ்ந்த சாவித்திரியின் நிலமை எம். ஜி.ஆரை மிகவும் பாதித்து விட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகியை அழைத்து சாவித்திரியின் சிகிச்சைக்கான முழு செலவையும் தானே கட்டுவதாக உறுதி அளித்தார்.

ஒரு மாதம் சாவித்திரி அங்கு தங்கி சிகிச்சை பெற்றதுக்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டி , செட்டில் பண்ணினார் எம்.ஜி.ஆர்.

                                                       ***

எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு முன் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒரு வீட்டில் தன் தாய் , சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரோடு வசித்து வந்தாற் எம்.ஜி.ஆர். அன்றாட சாப்பாட்டுக்கே சில சமயம் கஷ்டப்பட்ட நேரம் அது.

ஒரு ஜப்பானிய தம்பதியினர் வீட்டில் சமையல்காரராக பணி புரிந்து வந்த ராமன் குட்டி என்ற குடும்ப நன்பர் எம்.ஜி.ஆருக்கு ஐந்து ரூபாய் குடுத்து உதவினார். அந்த பணத்தில்  அரிசி வாங்கி சாபிட்டது, மிகவும் தேவைப்பட்ட போது அவர் உதவியதை நினைவில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

பின்பு ஹீரோவானதும் அவரைத்தேடினார் எம்.ஜி.ஆர், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஜப்பானிய பெண் ஒருத்தியை மணந்து , ராமன் குட்டி என்ற நபர் ஜப்பானுக்கே சென்று விட்டார் என்ரு எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக டோக்கியோ நகரத்துக்கு சென்ற எம்.ஜி.ஆர் ஒரு நாள் நன்பர் ஒருவரை பார்க்க சென்ற போது நாயர் டீ ஸ்டால் என்ற டீ கடையை பார்த்த எம்.ஜி.ஆர் வியந்து போனார். காரை நிறுத்தச்சொல்லி உள்ளே சென்று விசாரித்தார் எம்.ஜி.ஆர்.

டோக்கியோ நகரில் நாயர் டீ கடையா ? ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் அந்தப் பெர்யர்ப்பலகை எழுதப்பட்டிருந்தது.

ஆர்வத்தில் காரில் இருந்து இறங்ட்கி ஊல்லே சென்று விசாரித்த எம்.ஜி.ஆருக்கு ஆச்சரியம்;

பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் குடும்ப நன்பராக இருந்தவரும் கேரளாவில் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரராக இருந்தவருமான ராமன் குட்டி தான் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று அறிந்ததும் எம்.ஜி.ஆருக்கு ஒரே மகிழ்ச்சி.

வயதாகி விட்ட போதிலும் ராமன் குட்டிக்கு எம்.ஜி.ஆரின் மீது பாசம் குறையவே இல்லை, எம்.ஜி.ஆர் வாழ்க்கை, திரைப்பட விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பற்றிக்கேட்டறிந்து மகிழ்ந்தார்.

என் திருப்திக்கு அவருக்கு வேண்டிய பணம் கொடுத்தேன்; எனக்கு மனம் நிறைவாக இருக்கு... என்று கூறினார் எம்.ஜி.ஆர்.

நன்றி மறவாமல் பல ஆண்டுகள் சென்றும் , வேறு நாடு சென்றிருந்த போதும் தனக்கு உதவியவரை தேடி பணம் கொடுத்து மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

                                                          ***

1977 சட்டசபை தேர்தல் நடைபெற்றது, அ.தி.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டார் அழகு திருநாவுக்கரசு, சவுரி ஐய்யங்கார் என்ற உள்ளூர் பெரும் பணக்காரர், பெரிய மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார் . இரவு ஏழரை மணிக்கு அந்தக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேச வேண்டும். ஆனால், வழியில் பல கூட்டங்களில் பேசிவிட்டு எம்.ஜி.ஆர் மன்னார்குடி வந்து சேர்ந்த போது நல்லிரவு 2 மணி.

இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகள் அப்போது வரவில்லை.

இரண்டு மணிக்கு பேச்சை ஆரம்பித்த எம்.ஜி.ஆர், இந்தக்கூட்டத்துக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் சில மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. அதர்க்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.. என்றார்.
'நீங்க ஒன்னும் மன்னிப்பு கேக்க வேண்டாம் நீங்க இங வந்ததே எங்களுக்கு பெரிய சந்தோஷம்' என்றனர் கூட்டத்தினர். அவர்கள் அன்பையும் ஆதரவையும் இரு கரம் கூப்பி வணங்கி விட்டு பேச ஆரம்பித்தார்.

                                                           ***

கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பேசும்போது கருணாநிதியை பற்றி தன் பேச்சில் குறிப்பிடும் போது கலைஞர் கருணாநிதி என்றே குறிப்பிடுவார்.

யாரையும் மரியாதை குறைவாகப் பேசமாட்டார்.

சில கூட்டங்களில் பேசும்போது ' எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். நீங்க என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க... உங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு வேளை சாபிட்டால் கூட , என் ஆயுசு பூராவும் சாபிடலாம். நீங்க தான் எனக்கு எல்லாம் என்று சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

                                                          ***

எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்த நேரத்தில், தமிழக அரசின் தலைமை செயலகத்திற்கு செல்லும்போது காருக்கு முன் பைலட் ஜீப் போகும் அதில் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள்.

TMX4777 என்ற அம்பாசிடர் காரில் பயணம் செய்வார் எம்.ஜி.ஆர்.

அவர் செல்லும் வழியில் டிராஃபிக்கில் எந்த மாற்றமும் இருக்காது. ரோட்டில் வண்டி ஓட்டுபவர்கள் யாரும் எம்.ஜி.ஆரின்  கார் கடப்பதற்காக தங்கள் வண்டிகளை நிறுத்த மாட்டார்கள்

ஒரு முறை தேனபேட்டை சிக்னல் அருகே, எம்.ஜி.ஆரின் கார் மீது ஒரு ஆட்டோ மோதி விட்டது. உடன் இருந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப டென்ஷனாகி விட்டனர். ' ஐய்யா, என்னை மன்னிச்சுடுங்கைய்யா... வண்டியிலே பிரேக் சரியா பிடிக்கல...' என்று பயத்தால் அழ ஆரம்பித்து விட்டார் அந்த ஆட்டோகாரர்.

பயப்படாதே!  என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் எம்.ஜி.ஆர்.

பிறகு ஆட்டோக்காரரிடம் 1500 ரூபாய் கொடுத்து ' வண்டியில ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா சரி பண்ணிக்கோ... டிராஃபிக்கில பார்த்துப்போ! என்று அட்வைஸ் பண்ணினார்.

                                                      ***

1980 தேர்தல் சமயம் அ.இ.அ.தி.மு.க சார்பில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார் எம்.ஜி.ஆர். மதுரை அருகே வாடிப்பட்டி என்ற இடத்துக்கு எம்.ஜி.ஆர் சென்ற போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்கு அதே ஊருக்கு வந்திருந்தார் சிவாஜி கனேசன். அதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர் அங்கிருந்து சென்ற பிறகு நாம் போகலாம் என்றார்.

வண்டிகளை அருகில் இருந்த சந்துக்குள் போகுமாறு சொன்னார். சிலருக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை... ' நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ?? ' என்று கேட்டார்கள். ' சிவாஜியும் நானும் நெருங்கிய நன்பர்கள் . எங்களுக்குள்ளே எந்தப்பிரச்சனையும் எப்போதும் இருந்தது இல்லை. அவர் வந்து இருக்காரு. அவர் போன பிறகு நாம் போகலாம். தேர்தல் நேரத்துல எந்தப்பிரச்சனையும் வேண்டாம்...' என்று சொன்னார்.

                                                         ***

சிறிது நேரத்தில் சிவாஜியும் அவருடன் வந்தவர்களும் சென்ற பிறகு எம்.ஜி.ஆர் கிளம்பினார்.

சிறிது தூரத்தில் ரோட்டில் ஒரே கூட்டம். விசாரித்ததில், சிவாஜி குரூப்பில் சென்ற ஒரு கார், ஆறு வயது சிருவன் மீது மோதி அவன் இறந்து விட்டான் , கார் நிற்காமல் போய்விட்டது என்பது தெரிய வந்தது.

நடந்த விவரங்களை அறிந்ததும், சிறுவனின் தந்தையை அழைத்து அவரிடம் 25,000 ரூபாய் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

அவருடைய எட்டு வயது மூத்த மகனுக்கு, கல்லூரி படிப்பு வரை ஆகும் எல்லா படிப்பு செலவையும் தான் ஏற்பதாக அவருக்கு வாக்களித்தார் எம்.ஜி.ஆர்.
'சிவாஜிக்கு இந்த விபத்து நடந்தது தெரிந்து இருக்க நியாயம் இல்லை, தெரிந்திருந்தால் அவரும் உங்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பார்...' என்று சிவாஜிஜையும் விட்டுக்கொடுக்காமல் பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் பேசிய பிறகு தான் ஆயிரம் பேர் உள்ள அந்தக்கூட்டம் கலைந்து சென்றது. 

மறுநாள் காலையில் சிவாஜி தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்து, இரவு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு, ' உங்க டிரைவரை ஜாக்கிரதையாக நிதானமாகப் போகச்சொல்லுங்க...' என்றார் என்.ஜி.ஆர். ' நடந்த விஷயம் எனக்குத் தெரியாது. யாரும், எதுவும் சொல்லலை. மூடி மறைச்சுட்டாங்க...' என்று வருத்தப்பட்டார் சிவாஜி.
 
                                      *******************

என்னங்க எம்.ஜி.ஆர் பத்தி பல தெரியாத விஷயங்கள் தெரிஞ்சுக்கீட்டீங்களா ?? 

அட இது பாதிதாங்க... அவர பத்தி சொல்ல என்னும் எவ்வளவோ இருக்கு ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லீட்டா அப்புறம் வேற பதிவுக்கு நான் எங்க போறது ?? ஹிஹி அதனால பார்ட் 2 கூடிய சீக்கிரம் எழுதுறேன். 


இவ்வளவு நேரமும் அலை கடல் என திரண்டு வந்து (?!?!) என்னோட பதிவ பொறுமையா இருந்து படிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி 

உங்களுக்கு என்னோட பதிவு பிடிச்சிருந்தா பின்னூட்டத்தில கருத்து போட்டீங்கன்னா என் வலைப்பூவுக்கும் ஏதோ கொஞ்சப்பேர் வற்றாங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன் போனா போகுது உங்களால ஒருத்தன சந்தோஷப்படுத்த முடிஞ்சுதேனு போற போக்கில கருத்திட்டுட்டு போங்களேன் ( இந்தப்பொளப்பு பொளைக்கிறதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்னு தானே சொல்ல வர்றீங்க ? ஹிஹிஹி )  

மறுபடியும் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் பார்ட் 2 ல  மீண்டும் சந்திப்போம்.

நன்றி.


**********************************************************************